கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

coimbatore collecter
Spread the love

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையின் மத்தியப்பகுதியில் உள்ள கோபாலபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் மாநகர காவல் ஆணையர் அலுவகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற முக்கிய அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. இதனால், இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய பகுதியாகும்.

இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு “வெடிகுண்டு வைத்துள்ளோம்” எனக் கூறும் மிரட்டல் எமெயில் வந்தது. உடனடியாக இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதே இடத்திற்கு விரைந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முக்கியமாக அலுவலக அறைகள், வாகன நிறுத்தும் பகுதி மற்றும் வழிநடக்கைகள் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மின்னஞ்சல் மிரட்டலால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் வருகை தந்த பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் நுழைவை கட்டுப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மிரட்டல் அனுப்பிய நபர் யார்? அவரது நோக்கம் என்ன? என்பது தொடர்பாக மாநகர காவல் துறையும், சைபர் கிரைம் பிரிவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குறித்த இ-மெயிலை அனுப்பிய ஐ.பி. முகவரியை கண்டறியும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையான மிரட்டலா, சாடை மிரட்டலா அல்லது வெறும் புரளியா என்பது விரைவில் விசாரணையில் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.