, , , , ,

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்
Spread the love

சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3,90,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை. நிர்வாக திறமை இல்லாததால் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறமாக தந்திரமாக ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வந்த புயல் எந்த ஆட்சியிலும் ஏற்படவில்லை. தானே, வர்தா, கஜா என அடுத்தடுத்து வந்து டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்டது. கொரோனா காலத்திலும் 1000 ரூபாய் கொடுத்து அனைத்தையும் இலவசமாக கொடுத்தோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது, அது நிறைவேறாது, 200 தொகுதிகளில் வெற்றி என்பது அஇஅதிமுக கூட்டணிக்கு பொருந்தும். திமுக உறுப்பினர்கள் சோர்ந்து உள்ளார்கள். அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. திமுக ஆட்சியில் மக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்களே அஞ்சுகிறார்கள். அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஆண்டுதான், நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை மறந்து வேலை பார்க்க வேண்டும்” என்றார்.

ஃபெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம், டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்,  திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தல்,
மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தல்,  ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றுக்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம், குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம், கோதாவரி – காவிரி, பரம்பிகுளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம், நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம், வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல், சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தல், இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தல், தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்,  2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *