கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றார்.
இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் மட்டுமின்றி அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அவர்களை சத்குரு வரவேற்றார். பின்னர் அவர்கள் ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியான லிங்கம் உள்ளிட்ட சக்தி ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்தனர். மேலும் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத க்ரியா நிகழ்விலும் பங்கேற்றனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா மறுநாள் காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இரவு முழுவதும் களைகட்டிய கலை நிகழ்ச்சிகளில், கிராமி விருது வென்ற திரையிசை பாடகர் சங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து, தெய்வீகம், விவசாயம் மற்றும் மண் சார்ந்த பாடல்களை தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிர செய்தார் தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம். அதுமட்டுமின்றி மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடி மக்களின் உற்சாகத்தை பன்மடங்கு கூட்டினர். மேலும் லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இதுமட்டுமின்றி மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு மற்றும் பிரம்மமுஹூர்த்த வேளையில் லட்சக்கணக்கான மக்கள் சத்குருவுடன் ஓம் நமச்சிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளிலும் மேற் கொண்டனர்.
Leave a Reply