மாணவர் அகிலனுக்கு நீதி கேட்டு 6-வது நாளாகப் போராட்டம்: சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பங்கேற்பு

Spread the love

கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், நீதி கேட்டு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே 6-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகவும், மாணவன் அகிலனுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம மாணவன் அகிலனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரை, சக மாணவர்களால் வீட்டிற்குள் புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தின்போதும் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. நீதிபதி சந்துரு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார். கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விரிவான அறிக்கைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்போதைய தவெக அரசும் இதற்கான உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. எனவே, நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போதே அவர்களின் சாதி குறித்த விவரங்கள் விண்ணப்பங்களிலும் பள்ளி ஆவணங்களிலும் இடம்பெறுகின்றன. அத்தகைய சூழலில், ஒரு ஆசிரியர் மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஆசிரியர் செய்ததாகக் கூறப்படும் செயல் மிகப்பெரிய குற்றமாகும். ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கிறார்கள். ஆனால், அகிலனை அழைத்துப் பேசி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எனவே, அகிலனின் மரணத்தை ஒரு நிறுவனத் தோல்வியாகவும், நிறுவன ரீதியான பொறுப்புணர்வு தேவைப்படும் சம்பவமாகவும் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆசிரியர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய சம்பவங்களில் வழக்கமான குற்றவியல் நடவடிக்கைகளைப் போல ஆதாரங்களையும் ஆவணங்களையும் மட்டும் தேடினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த அனைத்தையும் வெளிக்கொண்டு வருவது கடினமாக இருக்கலாம். காவல்துறை விசாரணை மீது நம்பிக்கை இல்லாத சூழலில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியிருப்பது போராட்டத்தின் முதல் வெற்றியாகும். சிபிசிஐடி விசாரணையை உரிய காலவரையறைக்குள் முடிக்க அரசு உத்தரவிட வேண்டும். அகிலனின் குடும்பத்தில் ஒருவருக்கு, குறிப்பாக அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும்; அதேநேரத்தில், குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் வரிகள் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லப்பட வேண்டியவை அல்ல. திருக்குறள், வள்ளுவர் மற்றும் பாரதியார் ஆகியோரின் கருத்துகள் வெறும் புத்தகப் படிப்புக்காக மட்டுமே இருக்கக் கூடாது. அவை வாழ்க்கையிலும் நடைமுறையிலும் பின்பற்றப்பட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 குறித்த விழிப்புணர்வை பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்ற அச்சம் மாணவர்களிடையே உருவாக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களைப் பணியில் இருந்து நீக்கவும் அரசு முன்வர வேண்டும்.

இந்தப் போராட்டம் கே.கே. நாயுடு பள்ளியின் செயல்பாடுகளுக்கு எதிரானதே தவிர, நாயுடு சமூகத்துக்கு எதிரானது அல்ல. பல்வேறு முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருப்பது பாராட்டத்தக்கது. அமைச்சர் ஆதவ் தன்னிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட சண்முகம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது, அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், போராட்டத்தைக் கைவிடுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும், இது தாம் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல; பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் போராட்டம் என்று தாம் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இத்தகைய வழக்குகளைக் கையாளும் காவல்துறை அதிகாரிகள் நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கையை அவசியம் படிக்க வேண்டும். இத்தகைய வழக்குகளை எவ்வாறு அணுக வேண்டும், எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் அந்த அறிக்கையில் உள்ளன. ஆசிரியர்கள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீதிக்காகப் போராடுவோம் என்றார்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன் பேசுகையில் மாணவன் அகிலனுக்கு நீதி கேட்டு ஆறாவது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அகிலனின் பெற்றோர், நீதி கிடைக்காமல் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருப்பதும், அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்பதும் இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், தவெக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

ஆசிரியர் விஜயக்குமார், உதவித்தொகை (Scholarship) தொடர்பாகக் கேட்டபோது, சக மாணவர்கள் முன்னிலையில் அகிலனிடம், “மாட்டுக்கறி உண்பீர்களா?” என்று கேட்டதாகவும், அதற்குப் பிறகுதான் சக மாணவர்கள் அகிலனை வேறுபாட்டுடன் பார்க்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார். பள்ளியில் சாதி ரீதியான துன்புறுத்தலுக்கும் ஒதுக்குதலுக்கும் ஆளானதால் அகிலன் மனரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து ஆசிரியர்களிடமும் தலைமையாசிரியரிடமும் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். பெற்றோரும் பள்ளிக்குச் செல்லுமாறு கூறிய நிலையில், ஏற்பட்ட மன உளைச்சலால் அகிலன் இந்த முடிவை எடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

முதல் தகவல் அறிக்கையில் நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திருவள்ளுவன், ஆசிரியர்களைக் கைது செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாகக் காவல்துறை கூறியபோதிலும், ஆசிரியர்களைக் காப்பாற்றுவதற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மாணவர்கள் சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாகக் கூறி அவர்களைக் கைது செய்த காவல்துறை, மாணவர்களிடையே சாதி குறித்துப் பேசியதாகக் குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் விஜயக்குமாரை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். ஆசிரியர் தவறு செய்யவில்லை என்றால் அவரை ஏன் பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வினவினார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், சக மாணவர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது அவர்கள் அச்சத்தின் காரணமாகச் சாட்சி சொல்லத் தயங்குவதாகத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், மாணவன் அகிலனுக்கு நீதி கேட்டு மக்கள் போராடும் நிலையை உருவாக்கியிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தில் தொடர்ந்து படுகொலைகள் நடைபெறுவதாகக் கூறிய அவர், அகிலனின் குடும்பத்துக்கு ஆதரவாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்களா என்றும், இந்து ஒற்றுமை குறித்துப் பேசும் வானதி சீனிவாசன், அதிமுகவினர் மற்றும் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு வந்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

நடிகை திரிஷா வரும்போது அங்கு செல்பவர்கள், அகிலனுக்கு நீதி கேட்கும் போராட்டத்திலும் பங்கேற்றிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்று கூறிய அவர், சினிமா மோகத்தில் வாக்களித்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார். கேள்வி கேட்கும் துணிச்சல் நீலச்சட்டை அணிந்த முற்போக்காளர்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே தவெக அரசிடம் தங்களது கோரிக்கை என்றார். சிபிசிஐடி விசாரணையிலும் நீதி கிடைக்கவில்லை என்றால் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில் அகிலனின் பெற்றோர் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று உறுதியாக நின்றதால்தான் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகிலன் தெரிவித்த தகவல்கள் தொடர்பாக நூலக ஆசிரியரிடம் கூறியதாகவும், அவர் தலைமையாசிரியரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படும் நிலையில், ஆதாரங்கள் இல்லை என்று துணைக் காவல் ஆணையர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சாட்சியம் அளிக்கத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. சாட்சிகள் சிதைக்கப்பட்டதற்குக் காவல்துறையே பொறுப்பு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் மட்டுமின்றி, பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள் நல வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் கேள்விக்குரியவை என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சாதி அடிப்படையிலான பாகுபாட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றும் வகையில் பல துறைகளும் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்கள் இடம்பெறுவதை ஏன் அனுமதிக்க வேண்டும் என்றும், இதனை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசுப் பள்ளிகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால் பல குழந்தைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்க வேண்டிய சூழல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளி நாட்குறிப்பில் சாதியைக் குறிப்பிடச் சொல்லப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மாணவர்கள் அனைவரும் ஒரே சீருடையை அணிவதன் நோக்கம் சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான்; அப்படியிருக்கும்போது பள்ளிகளில் சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் ஏன் தொடர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். குழந்தைகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது என்ற ஆதங்கத்துடன்தான் தாங்கள் போராடி வருவதாகக் கூறினார்.

பள்ளியின் பெயரில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயரை ஒரு வாரத்துக்குள் நீக்காவிட்டால், தாங்களே கருப்பு மை கொண்டு அதை அழிப்போம் என்று திருமுருகன் காந்தி எச்சரித்தார். வழக்குகளையும் சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்வது தங்களுக்குப் புதிதல்ல என்றும், சட்டப்படி கைது செய்ய வேண்டியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார். சட்டத்தின் ஆட்சியை அரசு நிலைநாட்டத் தவறினால், தாங்களே களத்தில் இறங்கிச் செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

காவல்துறை, தவெக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், கொங்கு மண்டலத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்குக்கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சித்தார். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிஎஸ்ஜி நிறுவனத்துக்குப் பின்னால் உள்ள கோவிலுக்குள் பெருமளவில் நுழைவோம் என்றும் எச்சரித்தார். இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும், முழக்கங்களை எழுப்பிவிட்டுச் செல்லும் காலம் முடிந்துவிட்டது; களத்தில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் தெரிவித்தார். அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்தால் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வலிமையாகப் போராட முடியும் என்றார்.

ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் பேசுகையில் அகிலனின் பெற்றோர் ஆறு நாட்களாக உறுதியாகப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். “மாட்டுக்கறி சாப்பிடுகிறாயா?” என்று கேட்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தீண்டாமை மனப்பான்மையே இந்தப் போராட்டத்தின் அடிப்படைக் காரணம் என்று அவர் தெரிவித்தார். உணவுப் பழக்கத்தை மையமாகக் கொண்டு ஒருவரை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எதிராக உணவு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றும், மாட்டுக்கறி உண்பது குறித்த சமூகப் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வரலாற்றில் மாட்டுக்கறி உண்பது தொடர்பான நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், புத்தருக்குப் பிறகு சிலர் நல்லவர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்வதாக விமர்சித்தார். உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் மனப்பான்மையை முறியடிக்க, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் எழுப்பினார். சிறைச்சாலை முதல் காளப்பட்டி வரையிலான பகுதிகளில் இத்தகைய நில விவகாரங்கள் இருப்பதாகக் கூறினார்.

தமிழகத்தில் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அதியமான், அவை தொடர்பான வழக்குகளை முறையாக விசாரித்து உரிய தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார். சனாதன தர்மத்தை முன்னிறுத்தும் திட்டமிட்ட செயல்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்து சனாதனக் கருத்துகளுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். தற்போதைய அரசு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விமர்சித்தார். “மாட்டுக்கறி சாப்பிடுகிறாயா?” என்று கேட்டு ஒருவரை வேறுபடுத்திப் பார்க்க வைக்கும் மனப்பான்மைக்குச் சனாதனக் கருத்தியலே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த அரசை நம்பிப் பயனில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சண்முகம் மாணவனின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மாணவனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்

தொடர் ஆர்ப்பாட்டத்தின் விளைவாகத்தான் சிபிசிஐடிக்கு இன்றைய தினம் தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது வற்புறுத்துகிறோம் என்றார்.

தலைமையாசிரியர் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு மரணம் நிகழ்ந்து இருக்காது, கல்வி உதவித் தொகை பெரும் மாணவர்கள் யார் என்று வகுப்பறைக்குள் கேட்பது சட்டவிரோதமான செயல் என்ற அவர் மாணவர்களின் சாதி குறித்தான விஷயங்கள் அனைத்தும் பள்ளி ஆவணங்களிலேயே இருக்கும், சக மாணவர்கள் முன்பு சாதியை குறித்து கேட்பது காயப்படுத்துகின்ற செயல் என்றார.

மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு வேலை வழங்க வேண்டும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்
என்றும் கோவை காவல்துறை ஆறு நாட்களாக உரிய முறையில் இந்த வழக்கு விசாரணையை அணுகவில்லை என்றார்.

எத்தனை தலைவர்கள் இங்கிருந்து முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். எனவே இங்கிருந்து மீண்டும் முதல்வரை சந்தித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்நேரம் முதல்வரின் கவனத்திற்கு இது குறித்து தெரிய வந்திருக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூட நேற்று என்னிடம் இது குறித்து பேசி இருக்கிறார் மாணவர்களிடையே உள்ள சாதிய ரீதியான போக்குகள் குறித்து ஆய்வு செய்த முதல் குழு சந்துரு தலைமையிலான குழு அவர்களது அறிக்கையில் இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அமைச்சர்கள் காவல்துறையினர் முதலில் சந்துரு அவரின் ஆணையை படிக்க வேண்டும் அதன்படி நடந்து கொண்டாலே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.

இந்த வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் சம்பந்தப்பட்ட இருப்பதாக சில விமர்சனங்கள் எழுவது தொடர்பான கேள்வி, அப்படி எனக்கு தெரியவில்லை உள்ளூர் காவல்துறை செல்வாக்கு செலுத்துகிறதோ என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது என்று கருத்துக்கள் பகிரப்பட்டதால் தான் சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.