“திரும்பத் திரும்ப ஏன் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள்? மனசாட்சி இல்லையா?” கோவையில் செய்தியாளர்களிடம் வைகோ ஆவேசம்!

Spread the love

“என்னைப் புண்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டுக் கேள்வி கேட்கிறீர்கள். இரவில் வீட்டுக்குச் சென்று படுக்கும்போது இதைப் பற்றி நினைத்துப் பார்ப்பீர்களா?” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவையில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் கடந்த இருதினங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோவிடம், வாச்சாத்தி வழக்கில் செங்கோட்டையன் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அவர், செய்தியாளர்களைத் திமுகவின் ஏஜெண்டுகள் என்று விமர்சித்தது சர்ச்சையானது.
இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சென்னையில் மறைந்த தவெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் பார்த்திபனைத் தான் திட்டியதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு, “அமைச்சர் பார்த்திபனை நீங்கள் கைநீட்டிப் பேசும் வீடியோ பதிவு இருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த வைகோ, குறுக்கிட்டுப் பேச வேண்டாம் எனக் கடிந்து கொண்டதுடன், “நீங்கள் திமுகவின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறீர்கள்” என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், “எப்படியும் பத்திரிகைகளில் வைகோ கோவையில் ஆவேசம், வைகோ கோபப்பட்டார் என்றுதான் எழுதப்போகிறீர்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 62 ஆண்டுகளாக நான் பார்க்காத விமர்சனங்களா?” என்றார்.
இதற்கிடையே, மதிமுகவினர் கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும், விரைவில் தவெகவுடன் மதிமுகவை வைகோ இணைத்துவிடுவார் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த வைகோ, “எங்கள் கட்சியை எந்தக் காலத்திலும் யாராலும் கரைக்க முடியாது. 32 ஆண்டுகளாக எங்களைக் கடந்து வந்த கட்சி எதுவும் கிடையாது. எங்கள் கட்சியைப் பற்றிக் குதர்க்கமாகவும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் கேள்வி கேட்கிறீர்கள்” என்றார்.
தொடர்ந்து, “திரும்பத் திரும்ப அதே கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? என்னைப் புண்படுத்த வேண்டும் என்றே கேட்கிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நான் கோபப்பட்டுப் பேச வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கேட்கிறீர்கள்” எனச் சாடினார்.
மல்லை சத்யா குறித்த கேள்விக்கும் கடுமையாகப் பதிலளித்த வைகோ, “என்னை எப்படியெல்லாம் சீண்ட வேண்டும், புண்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறீர்கள். இரவில் வீட்டுக்குச் சென்று படுக்கும்போது, ஒருவரைப் புண்படுத்திவிட்டோமே என்று நினைத்துப் பார்ப்பீர் களா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
கோவை மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஆர்.ஆர்.மோகன் குமார் உடன் இருந்தனர்.