இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய கொடையாளர்கள் பட்டியலில், எச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனர் சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
ஹுருன் இந்தியா மற்றும் எடல்கிவ் அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் சமூகப் பணிகளுக்காக சிவ நாடார் குடும்பத்தினர் ரூ.2,593 கோடி நன் கொடை வழங்கியுள்ளனர். இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக ரூ.7.1 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டைவிட 127 சதவீதம் அதிகமாக ரூ.877 கோடி வழங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். பஜாஜ் குடும்பத்தினர் ரூ.632 கோடியுடன் மூன்றாவது இடத்திலும், முகேஷ் அம்பானி ரூ.620 கோடியுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
சைரஸ் பூனாவாலா மற்றும் ஆதார் பூனாவாலா ஆகியோர் 94 சதவீதம் அதிகரித்து ரூ.336 கோடியும், சுதிர் மேத்தா மற்றும் சமீர் மேத்தா ஆகியோர் 77 சதவீதம் அதிகரித்து ரூ.334 கோடியும் நன்கொடை வழங்கியுள்ளனர். நந்தன் நிலேகனி, ரோகிணி நிலேகனி, நாராயண மூர்த்தி உள்ளிட்ட இன்ஃபோசிஸ் குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக ரூ.920 கோடி வழங்கியுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 219 கொடையாளர்களும் இணைந்து ரூ.11,554 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
இது முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் அதிகமாகும். இவர்களில் 19 பேர் ரூ.100 கோடிக்கு மேலும், 32 பேர் ரூ.50 கோடிக்கு மேலும், 80 பேர் ரூ.20 கோடிக்கு மேலும் நன்கொடை அளித்துள்ளனர்.
துறைவாரியாக, கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ.4,188 கோடி (36 சதவீதம்) வழங்கப் பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ.1,768 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 82 சதவீதம் அதிகமாகும். கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியப் பணிகளுக்கு ரூ.1,377 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் சிவ நாடார் குடும்பத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.1,220 கோடியாகும்.
நாளொன்றுக்கு ரூ.7.1 கோடி தர்மம்! 5-வது ஆண்டாக முதலிடத்தில் சிவ நாடார்!



Leave a Reply