நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அக்டோபர் 24 முதல் 26ஆம் தேதி வரை உதகைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், மலைப்பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் நள்ளிரவு முதல் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இதற்கிடையே, மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் முன்னேறிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்தைச் சீர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மழையில் சிக்கி மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள், மேட்டுப்பாளையத்தில் உள்ள பாதுகாப்பான மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக மலைப்பாதையில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலைச் சூழலைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 24 முதல் 26ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் உதகைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Leave a Reply