முதல்வர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Spread the love
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதாகக் கூறப்படும் ஆணவம் மற்றும் அநாகரிகமான கருத்துகளைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு சனிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, எம்.எல்.ஏ. சுதாகர், தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் கே.எம். தண்டபாணி, அருள்மொழி, ராஜீவ்காந்தி, கணேஷ்குமார், முன்னாள் எம்.பி. நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரை செந்தமிழ்செல்வன், “விஜய் திமுக தலைவரை மட்டுமல்ல, கட்சியின் கொள்கையையும் கொச்சைப்படுத்தியுள்ளார். எந்த உருவத்தில் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது” எனக் கூறினார். மேலும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தொண்டாமுத்தூர் ரவி பேசுகையில், “தலைவர் மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது விஜய் பிறக்கவே இல்லை. வரும் இடைத்தேர்தலில் திமுகவின் பலத்தை காட்டுவோம்” என்றார்.

தளபதி முருகேசன் பேசுகையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு சம்பட்டி அடி கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது விஜய்யைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.