மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.
இதற்காகக் கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டு, செப்டம்பர் 6 முதல் யாகசாலை பூஜைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத் திருப்பணிகள் மற்றும் சுவாமிகளுக்கு மருந்து சாத்தும் நிகழ்வுகள் நடப்பதால், செப்டம்பர் 11 முதல் 16-ஆம் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது; பக்தர்கள் செப்டம்பர் 17 அன்றுதான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
தொடர்ந்து செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், 58 இடங்களில் வாகன நிறுத்தங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், நவீன சிசிடிவி கண்காணிப்பு என மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Leave a Reply