கோவை: மாணவர்களின் திறன், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2026-ன் 5-வது பதிப்பின் 2-ஆம் நாள் நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகளின் சாதனையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.
பிரார்த்தனைப் பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியை SSVM நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் தொடங்கி வைத்தார். SSVM நிறுவனங்களின் இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் வரவேற்புரையாற்றினார்.

காலை நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் ககன்யான் திட்ட விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஏர் கமோடோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதையொட்டி நடைபெற்ற ‘இன்ஸ்பிரேஷனல் குரு அவார்ட்ஸ் – எக்ஸ்டர்னல்’ விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மாணவர்களுடன் கலந்துரையாடினார். திறமை மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது என்றும், தொடர்ச்சியான முயற்சி, ஒழுக்கம், மன வலிமை மற்றும் முறையான தயாரிப்பின் மூலம் மட்டுமே சிறப்பை அடைய முடியும் என்றும் அவர் கூறினார். பின்னர் 2-ஆம் தொகுதி ‘இன்ஸ்பிரேஷனல் குரு அவார்ட்ஸ்’ விருதுகளையும் அவர் வழங்கினார்.
பரதநாட்டியக் கலைஞரும் நடன அமைப்பாளருமான ருக்மிணி விஜயகுமார் தனது கலை நிகழ்ச்சியுடன் மாணவர்களுடன் கலந்துரையாடி, படைப்பாற்றல் மற்றும் கலை வெளிப்பாடு குறித்து விளக்கினார். ‘ஃப்ளெக்ஸ் யுவர் ஃபியூச்சர்’ என்ற கான்க்ளேவின் மையக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இசை, கதை மற்றும் நடிப்பை ஒருங்கிணைத்த இசை நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிற்பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் மாணவர்களுடன் கலந்துரையாடினார். தனது கிரிக்கெட் பயணம், தலைமைத்துவம், சாதனை மற்றும் விடாமுயற்சி குறித்து அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ‘ஸ்டூடன்பிரனர் அவார்ட்ஸ் – எக்ஸ்டர்னல்’ விருதுகள் வழங்கப்பட்டன. குருகிராம் ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த அத்விக் ஐயர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அவசர உதவி அமைப்பான ‘AIDE’ திட்டத்துக்காக முதல் பரிசு பெற்றார்.
ஓசூர் தி அசோக் லேலண்ட் பள்ளியைச் சேர்ந்த ஸ்ருதிகா சரவணன், ரக்ஷிதா ஞானசேகரன் ஆகியோர், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘SMART GUARD’ ஹெல்மெட் திட்டத்துக்காக 2-ஆம் பரிசு பெற்றனர். சென்னை அண்ணாநகர் சென்னை பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த எஸ். மெர்சி இளவேயினி, ஆறு சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட சத்தான புரத உணவான ‘BITE & GO’ திட்டத்துக்காக 3-ஆம் பரிசு பெற்றார்.
மேலும், ‘தி முட்கர் மெத்தட்’ மற்றும் ‘தி ஆர்ட் ஆஃப் மூவ்மென்ட்’ உள்ளிட்ட அனுபவப் பயிற்சி முகாம்களில் மாணவர்கள் பங்கேற்று உடல் இயக்கம், சுய வெளிப்பாடு உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டனர்.
வகுப்பறைக்கு வெளியேயான அனுபவங்கள் மாணவர்களிடம் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் மனிதநேயத்தை வளர்க்க உதவுகின்றன என்று SSVM நிறுவனங்களின் இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் தெரிவித்தார். கான்க்ளேவில் பகிரப்பட்ட பல்வேறு சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணங்கள், வெற்றி என்பது நேரான பாதை அல்ல என்பதையும், ஒழுக்கம், ஆர்வம் மற்றும் தொடர் கற்றல் அவசியம் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்தியதாக டாக்டர் மணிமேகலை மோகன் தெரிவித்தார்.
விளையாட்டு, விண்வெளி, கலை, தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களையும் இளம் கண்டுபிடிப்பாளர்களையும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு 2-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வழங்கின.



Leave a Reply