ஓணம் பண்டிகையையொட்டி 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி 30 அடி விட்டத்தில் பிரம்மாண்டமான ‘முண்டுக்கலம்’ உருவாக்கி, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கேரளத்தின் பாரம்பரிய ஓணம் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமான பூக்கோலத்தையும், தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியையும் இணைக்கும் வகையில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொச்சியில் உள்ள ஃபோரம் மாலில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி சுமார் 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி இந்த பிரம்மாண்ட முண்டுக்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த சாதனை, அதன் பிரம்மாண்ட அளவை மட்டுமின்றி, இந்தியாவின் பாரம்பரிய ஜவுளிக் கலாசாரத்தை நவீன வடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. ஓணம் பண்டிகையின் கலாசார சிறப்பையும் வேட்டியின் பாரம்பரிய அடையாளத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த முண்டுக்கலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதற்கான ஆசிய சாதனை புத்தகச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிய சாதனை புத்தகத்தின் நடுவர் சஞ்சய் போலா, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன், நிர்வாக இயக்குநர் பி.ஆர். அருண் ஈஸ்வர் ஆகியோரிடம் சான்றிதழ் மற்றும் விருதை வழங்கினார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் கூறுகையில், “வேட்டி என்பது வெறும் ஆடை அல்ல; அது நமது கலாசாரத்தின் ஓர் அங்கம். ஓணம் பண்டிகையில் வேட்டியின் கலாசாரத் தொடர்பை மக்கள் அனுபவிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். சுமார் 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி முண்டுக்கலம் உருவாக்கியதன் மூலம் ஓணத்தின் கொண்டாட்ட உணர்வையும் வேட்டியின் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்க முடிந்தது. இந்த முயற்சி ஆசிய சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டது பெருமை அளிக்கிறது” என்றார்.
திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராம்ராஜ் காட்டன், பாரம்பரிய ஆடைகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. வேட்டிகளுடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், குர்தாக்கள், துண்டுகள், சேலைகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளையும் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மற்றும் நெசவுக் கலாசாரத்தை மீட்டெடுத்து, அவற்றை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பல்வேறு முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply