இந்த சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்றது. சாவடிப்பாரா குடியிருப்புப் பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த தாய் யானையும் குட்டி யானையும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ரயில் மோதியதில் யானைகளின் உடல்கள் சுமார் 50 மீட்டர் தூரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. விபத்துக்குப் பிறகு ரயில் வனப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. வனப்பகுதியில் ரயில் குறைந்த வேகத்தில் சென்றதால் தடம் புரளாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து கேரளா மற்றும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வனச்சரக அலுவலர் ஆர்.எஸ். பிரவீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், டிஆர்எம் மதுகர் ரவுத் உள்ளிட்ட மூத்த ரயில்வே அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வாளையார் பிரிவில் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடப்பதைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மீண்டும் இரு யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வாளையார் மான் பூங்காவின் பின்புறப் பகுதியில் ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply