கோவை பீளமேட்டில் உள்ள மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது:
நாட்டில் தேசிய உணர்வை அதிகரிக்கும் வகையில், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின கொடி பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மாலை கோவையில் கொடி பேரணி நடத்த அனுமதி கோரி மாநகர காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை சந்தித்தபோது, பேரணி நடத்துவதற்காக 3 இடங்களைத் தேர்வு செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து காந்திபுரம் கிராஸ்கட் சாலை முதல் டாடாபாத் வரையிலும், பூக்கடை மார்க்கெட் வழியாக காமராஜபுரம் உள்ளிட்ட 3 வழித்தடங்களை பரிந்துரைத்தோம். ஆனால், அந்த பகுதிகளில் மசூதி உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதற்கு முன்பு இதே பகுதிகளில் தி.மு.க., பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் மற்றும் பேரணிகளை நடத்தியுள்ளன. ஆனால், பா.ஜ.க.வுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், காவல்துறை அனுமதி மறுப்புக்கு அரசு தரப்பில் காரணம் கூறப்படுவதாகவும், தமிழக வெற்றிக் கழக அரசு சுதந்திர தின கொடி பேரணியை நடத்துவதை விரும்பவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கோவையில் சுதந்திர தின கொடி பேரணியை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு முக்கிய தலைவர்களை அழைத்து பிரமாண்டமான சுதந்திர தின பேரணி நடத்தப்படும் என்றும் ரமேஷ்குமார் தெரிவித்தார்.



Leave a Reply