உதயநிதி மாற்றிப் பேசுவது வழக்கில் இருந்து தப்பிக்கவே: தவெக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி

Spread the love

உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் தொடர்பான வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே, அவர் தற்போது தனது பேச்சை மாற்றிக் கூறி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, கீழே இருந்து சிலர் கத்தியபோதே அவர்களை தடுத்திருக்க வேண்டும். காவிரி குறித்து நான் சொன்னேன் என்று உதயநிதி கூறியது கேவலமானது. காவிரி தாயை அசிங்கப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது வேதனைக்குரியது.

இதுபோன்ற பேச்சுகளை ஏற்க முடியாது. இதுவரை எந்த முதலமைச்சராவது இதுபோன்று பேசியுள்ளார்களா? முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி குறித்து ‘பால்டாயில் குடித்தபோதே போயிருக்க வேண்டும்’ என்று கூறியபோதும் அதைக் கண்டித்தேன். ஏளனமான பேச்சுகளை ஏற்க முடியாது.

சட்டமன்றத்திற்குச் சென்றாலும் அங்கும் பெண்கள் இருக்கிறார்கள். பேசியதை வெட்டி ஒட்டிவிட்டார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது, இந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பதற்காகத்தான். தோல்வியை ஏற்க முடியாமல் இவ்வாறு பேசுகிறார்கள்.

நடிகை திரிஷா குறித்து ஆர்.எஸ். பாரதி கூறிய கருத்து தொடர்பாக, ‘திரிஷா என்ன முதல்வரா? பிரதமரா?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ். பாரதி தனது வீட்டுப் பெண்களின் பெயர்களை இதுபோன்று கூறுவாரா? ஆளுங்கட்சியை எதிர்த்து பேசுகிறோம் என்பதற்காக ஒரு பெண்ணைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

நடிகை திரிஷா புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிப்போம். ஜாமீன் பெற வேண்டுமென்றால் கீழமை நீதிமன்றத்தில்தான் பெற வேண்டும். சட்டமன்றத்திற்கு இவர்கள் மக்கள் பணியாற்றத்தான் செல்கிறார்களா? பேசியது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

சனாதனம் குறித்து உதயநிதி பேசியபோது புகார் அளித்தும் அவரை கைது செய்யாதது ஏன் என்று கேட்கிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசுவது வேறு; சனாதனம் குறித்து பேசுவது வேறு. இரண்டையும் ஒன்றாகக் கருத முடியாது” என்றார்.