வீடு வாங்க விரும்புவோர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கான ‘ஃபேர்ப்ரோ 2026’ வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா, கோவை கொடிசியா வளாகம் ஹால்-டி அரங்கில் ஆகஸ்ட் 7 முதல் 9-ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.கிரெடாய் கோவை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இக்கண்காட்சியில், இந்த ஆண்டு 35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள் இடம்பெற உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான வீடுகள், மனைகள், ஆடம்பர வீடுகள் மற்றும் முதலீட்டுக்கான சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு ஒப்பிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னணி வங்கிகளும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளதால், வீட்டுக் கடன் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், நிதி ஆலோசனைகளைப் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் மூன்று நாள்களில் மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானச் செலவு, நில விலை மற்றும் பதிவுக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வீடு வாங்குவோர் பல்வேறு திட்டங்கள், இடங்கள், வசதிகள் மற்றும் விலை விவரங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டு முடிவெடுக்க ‘ஃபேர்ப்ரோ’ கண்காட்சி உதவும் என கிரெடாய் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தக் கண்காட்சிக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முக்கிய ஸ்பான்சராகவும், ஜாகுவார் அண்டு கம்பெனி, ரெனாகான் மற்றும் லிங்க்ரா வயர்ஸ் அண்டு கேபிள்ஸ் ஆகியவை கோல்டன் ஸ்பான்சர்களாகவும் உள்ளன. ஈகிள் விண்டோஸ் மற்றும் கோனே எலிவேட்டர்ஸ் அண்டு எஸ்கலேட்டர்ஸ் ஆகியவை கார்ப்பரேட் ஸ்பான்சர்களாக பங்கேற்கின்றன.
இதுகுறித்து கோவை கிரெடாய் தலைவர் அரவிந்த் குமார் எஸ்.ஆர்., செயலாளர் சஞ்சனா விஜயகுமார், பொருளாளர் மற்றும் ஃபேர்ப்ரோ 2026 தலைவர் கார்த்திக் குமார் பி. ஆகியோர் கூறுகையில், வீடு வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பல்வேறு திட்டங்களை நேரடியாகப் பார்வையிட்டு, கட்டுமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி, தங்களுக்கேற்ற சொத்துகளைத் தேர்வு செய்யும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கிரெடாய் கோவையில் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர் கட்டுமான நிறுவனங்கள் உள்ளதாகவும், திட்டமிட்ட நகர வளர்ச்சி, வெளிப்படையான மற்றும் நெறிமுறை சார்ந்த கட்டுமான நடைமுறைகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில் அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உதவி பொது மேலாளர்கள் நா. இராஜ பெருமாள், யு. சங்கமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.



Leave a Reply