தமிழகத்தில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு – மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சுதந்திரத்திற்குப் பிறகு இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்த சாதனையை நிகழ்த்திய தமிழக மக்களுக்கு அவர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தனது மனைவி அனுராதாவுடன் டெல்லியில் இருந்து கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4.93 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையாகும். மேலும், இந்தத் தேர்தலில் சுமார் 86 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இதுவும் தமிழக வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிந்தைய அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும்” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தென்னிந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், ஜவுளித் தொழில் மற்றும் பொறியியல் துறைகளின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கோவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. அதேபோல், தமிழகத்தின் வளமான ஆன்மீக மரபு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை வளங்களை மக்கள் பெருமையுடன் பாதுகாத்து போற்ற வேண்டும்” என்றும் கூறினார்.