23 ஆண்டுகளுக்குப் பிறகு மகனை மீட்ட தாய்

Spread the love
23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை, கோவை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பஞ்சாப்பில் இருந்து மீட்டுத் தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி – சுந்தரி தம்பதியினர், பிழைப்புத் தேடி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு குடிபெயர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரகாஷ் மற்றும் பிரபு என்ற இரு மகன்கள் உள்ளனர்.

2003-ஆம் ஆண்டு, 16 வயதாக இருந்த மூத்த மகன் பிரகாஷ் திடீரென வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் சென்னையில் இருப்பதாக பிரகாஷ் தெரிவித்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷின் தந்தை ராமமூர்த்தி புற்றுநோயால் உயிரிழந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் பஞ்சாப்–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொத்தடிமையாக வேலை செய்து வந்ததும், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்ததும் சுந்தரிக்கு தெரியவந்தது.

மகனை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தேவையான அரசு ஆவணங்களைப் பெறுவதற்காக சுந்தரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், பிரகாஷ் கோவையில் மூன்றாம் வகுப்பு வரை படித்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் விரைவாகத் தயாரிக்கப்பட்டன.

அரசு ஆவணங்களுடன் சுந்தரி பஞ்சாப் சென்ற நிலையில், அங்குள்ள அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து பிரகாஷை அவரிடம் ஒப்படைத்தனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மகனுடன் மீண்டும் இணைந்த சுந்தரி, தற்போது பிரகாஷுடன் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

“23 ஆண்டுகளாக இறைவனை வேண்டிக்கொண்டேன். இன்று அந்தப் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. என் மகனை மீண்டும் என்னுடன் சேர்க்க உதவிய கோவை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர் முத்தையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி,” என்று சுந்தரி கண்ணீருடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *