கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் தொழில், கல்வி, மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நகரமாக கோவை வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாகக் கூறினார். நகரின் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியம் என்றார்.
மேலும், கோவை தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக நகரமாக மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாகவும் விளங்குவதாக அவர் தெரிவித்தார். தினமும் இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு, தொழில், கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவைக்கு வந்து செல்வதால், நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல், தென் தமிழகத்தின் முக்கிய நகரமாக வேகமாக வளர்ந்து வரும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என குறிப்பிட்ட அவர், இரு நகரங்களின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு மறுபரிசீலனை செய்து திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முகம்மது ரபி கேட்டுக்கொண்டார்.
மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, இரு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கோவை, மதுரைக்கு மெட்ரோ இல்லை? மத்திய அரசுக்கு முகம்மது ரபி கடும் கண்டனம்!



Leave a Reply