ஜி. குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் மாணவர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு செயல்படுவதற்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவரை தமிழக ஆளுநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் சம்பத் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலையம் முன்பாக திரண்டிருந்த பாஜக தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல ஆண்டுகளாக தாய்மார்களுக்கு உயர்தர மகப்பேறு மற்றும் மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் ஜி. குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளேன். கோவைக்கும் தமிழ்நாட்டிற்கும் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியையும் பூரிப்பையும் அளிக்கிறது. தொலைக்காட்சிகள் வாயிலாக தமிழக மக்களுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்,” என்றார்.
தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இது அரசியல் சார்ந்த கேள்வி. அதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்களே அளிப்பார்கள்,” என்று கூறினார்.
தேசத்தின் ஒற்றுமை குறித்து பேசிய அவர், “மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்தியா இன்று உலக அரங்கில் வலுவான நிலையில் இருந்து சர்வதேச சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவதற்கு நமது தேசிய ஒற்றுமையே முக்கியக் காரணம்,” என்றார்.
தமிழ்நாட்டின் புதிய அரசு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “புதிய அரசு பொறுப்பேற்று செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்பு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது,” என்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



Leave a Reply