ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கே.பி.ஆர். குழுமத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று வகுப்பறைக் கட்டடங்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டதுடன், நவீன நூலகம், கணினி ஆய்வக வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பல்வேறு அடிப்படை கல்வி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவில் கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் புதிய கல்வி வசதிகளை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியபோது, அரசு பள்ளி மாணவர்களுக்கும் தரமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விச் சூழலை உருவாக்குவது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு என்றும், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக கல்வி கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து மே ற்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் சார்பில் பேசுகையில், புதுப்பிக் கப்பட்ட வகுப்பறைகள் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் என்றும், நூலகம் வாசிப்பு பழக்கத்தையும் அறிவுத் திறனையும் வளர்க்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், கணினி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் மூலம் மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியை எளிதாகக் கற்றுக்கொள்வதுடன், அவர்களின் புரிதல் திறன் மற்றும் டிஜிட்டல் அறிவும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மேம்பாட்டிற்கு பங்களித்து வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.1 கோடி மதிப்பிலான கல்வி மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்தி வழங்கிய கே.பி.ஆர். குழுமத்திற்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.
விஜயமங்கலம் அரசு பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன நூலகம், கணினி ஆய்வக வசதி – கே.பி.ஆர். குழுமத் தலைவர் டாக்டர் ராமசாமி திறந்து வைத்தார்



Leave a Reply