ரயில்வே பயண அட்டை புதுப்பிப்பில் தாமதம்: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

Spread the love
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (52), கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே துறையின் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டையை பயன்படுத்தி வந்துள்ளார். வாழ்நாள் பயண அட்டையாக வழங்கப்பட்டிருந்த அந்த அட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியானதைத் தொடர்ந்து, அதைப் புதுப்பிக்க அவர் விண்ணப்பித்துள்ளார்.

புதிய பயண அட்டைக்கான நடைமுறையின் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக அரசு மருத்துவமனைக்கு பலமுறை சென்றும் தேவையான கையெழுத்து கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மனு அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தனலட்சுமி, திடீரென நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மரியாதையற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கூறி கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார். தனது கோரிக்கையில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, “சாலையில் அமர்ந்து போராடினால்தான் சாமானிய மக்களின் குரல் வெளியில் கேட்கப்படுகிறதா?” என்று ஆதங்கத்துடன் அவர் கேள்வி எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனலட்சுமி, கடந்த இரண்டு மாதங்களாக ஒரே கையெழுத்துக்காக பலமுறை அரசு மருத்துவமனைக்கு அலைந்து வருவதாகவும், உரிய பதில் கிடைக்காமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கே நியாயம் கிடைக்காத நிலையில், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது விண்ணப்பத்தில் உடனடியாக கையெழுத்திட்டு பயண அட்டையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.