கோவை மாவட்ட ஆட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

Spread the love

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தாமதமான நிலையில், அரசு தரப்பின் அலட்சியத்தை கடுமையாகக் கண்டித்த ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் மாநில அரசு ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணை கோவையில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றபோது, சாட்சியம் அளிப்பதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

ஆனால், அரசு தரப்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் அரசு வழக்கறிஞர் விசாரணைக்கு வராததால், சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதுடன், சாட்சியாக வந்த மருத்துவருக்கும் தேவையற்ற அலைச்சலும் சிரமமும் ஏற்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

அரசு தரப்பின் அலட்சியம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்த ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், இதுபோன்ற அலட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் மாநில அரசு ரூ.10 ஆயிரம் தொகையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அந்தத் தொகையை நீதிமன்றத்தில் ஆஜரான மருத்துவரின் வருகைச் செலவு மற்றும் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், கோவை நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாத சூழலில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.