கோவை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை பாஜக தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பகுதியில் ரூ.1.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை அரவிந்த் மேனன் பார்வையிட்டார். அப்போது ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களிடம் பணிகளின் தற்போதைய நிலை, மீதமுள்ள பணிகள் மற்றும் நிறைவு காலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் ஓரிரு மாதங்களில் மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவித்தார். மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து செயல்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயண வசதி மேம்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அரவிந்த் மேனன், “இந்த ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. மின்சாரத் துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இத்தகைய பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம்,” என்று தெரிவித்தார்.



Leave a Reply