​​காட்டுக்குள் மாயமான பழங்குடியின முதியவர் சடலமாக மீட்பு

Spread the love

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி காப்புக்காடு பகுதியில், காணாமல் போன பழங்குடியின முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மூணுக்குட்டை பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளிங்கிரி (60), கடந்த ஜூன் 27-ஆம் தேதி மாலை வனப்பகுதிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளும், பழங்குடியினர் குடியிருப்பு மக்களும் இணைந்து இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மூணுக்குட்டை குடியிருப்பில் இருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் உள்ள கோபநாரி காப்புக்காடு பகுதியில் வெள்ளிங்கிரியின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தகவலறிந்த காரமடை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வனத்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவரின் உடலின் பெரும்பகுதி ஊனுண்ணி விலங்கால் சிதைக்கப்பட்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இது சிறுத்தை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் மற்றும் தாக்குதல் நடத்திய விலங்கு குறித்து உறுதியான தகவல் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் காட்டுக்குள் செல்வதைத் தவிர்த்து, தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.