கோவை சௌரிபாளையம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்கச் சங்கிலியை திருடியதாக மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களால் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது கழுத்தில் மீன் டாலர் பதிக்கப்பட்ட 3¼ பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாகராஜின் 16-ஆம் நாள் காரிய சடங்கிற்காக அவரது மகன் வெங்கடேஷ் குமார் மயானத்திற்குச் சென்றபோது, புதைகுழி தோண்டப்பட்டு மீண்டும் மூடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அங்கு தங்கியிருந்த நபரிடம் விசாரித்தபோது, கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில் நாகராஜின் மற்றொரு மகன் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் புதைகுழியை தோண்டி உடலை வெளியே எடுத்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது.
மேலும், திருடப்பட்ட சங்கிலி பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்டு உருக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வெங்கடேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேல் மற்றும் மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply