இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சம்பத்குமார்

Spread the love

கோவை சாய்பாபா காலனியில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 1.2 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் ஒப்பந்தப்படி ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைய வேண்டியிருந்தாலும், மக்கள் பயன்பாட்டிற்காக பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியை பசுமை மண்டலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வெள்ளலூர் பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் கூறினார்.