தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிய 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் 60-க்கும் மேற்பட்ட கடைகளை மூடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கையால் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாகவும், ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்த டாஸ்மாக் ஊழியர்கள், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.
அரசின் இந்த நடவடிக்கை சமூக நலனுக்காக வரவேற்கத்தக்கது என்றாலும், அதனை நம்பி பணியாற்றி வந்த ஊழியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், முந்தைய அரசுகளும் டாஸ்மாக் கடைகளை மூடியபோது, அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதே நேரத்தில், அரசு மதுபான கடைகள் மூடப்பட்டாலும், தனியார் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான அமைச்சர் இன்னும் நியமிக்கப்படாததால், தங்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமைச்சரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், தற்போது வரை குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களது பணிநிலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



Leave a Reply