கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் தினசரி ஏராளமான சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. லாரிகள் நிறுத்துவதற்காக கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லாரிப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெகதீசனுக்கு சொந்தமான லாரியின் (TN66 D 3619) பின்புற சரக்கு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக உக்கடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. அவர் கடந்த சில வாரங்களாக லாரிப்பேட்டை பகுதியில் கிடைக்கும் மெக்கானிக் பணிகளை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை அன்று ராஜனை கடைசியாக பார்த்ததாக அப்பகுதியினர் கூறியுள்ளனர்.
சடலத்தின் அருகே மதுபாட்டில் கிடந்ததால், மது அருந்தியபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக லாரியின் உரிமையாளர் ஜெகதீசனிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply