விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரும் மின்வாரிய ஊழியர்கள் கோவையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அக்கட்சியினரின் சார்பில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு, கட்சிக்கு ஆதரவு அளிக்கும் மின்வாரிய ஊழியர்கள் ஒன்று கூடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும், “முதலமைச்சர் விஜய் வாழ்க” என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மின்வாரிய தொழிற்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன,” என்றார்.
மேலும், மின்சாரத்துறை வெளியிட்டுள்ள புதிய கட்டண அறிவிப்பின்படி 0 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என்றும், 201 முதல் 400 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 4.70 வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் 100 யூனிட்டுக்கு யூனிட்டுக்கு ரூ.6.30 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த புதிய கட்டண முறையால் பழைய கட்டணத்துடன் ஒப்பிடும்போது சுமார் ரூ.235 வரை மிச்சமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த தொழிற்சங்கம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பழனிச்சாமி கூறினார்.



Leave a Reply