புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி விளையாடச் சென்றபோது மாயமானார். பின்னர் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்குப் பையில் அடைக்கப்பட்டு கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் புதுச்சேரி முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணா என்கிற கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து கருணாஸ் மீது போக்சோ விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கருணாஸை குற்றவாளி என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.



Leave a Reply