மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு – தடாகம் பள்ளத்தாக்கில் சோகம்

Spread the love
கோவை தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் ஆனைகட்டி – கேரளா வனப்பகுதியை இணைக்கும் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியால், வனப்பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள நடராஜன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு ஆண் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு இருந்த மாந்தோப்புக்குள் சென்ற யானை, அருகில் அமைந்திருந்த மின் மாற்றியை தள்ளியதாக கூறப்படுகிறது.

இதனால் மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *