கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களது முகத்தில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பவன்குமாரிடம் மனு அளித்தனர். அதில்
நடந்து முடிந்த தேர்தலில் கோவையில் மட்டும் வாக்காளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர் என்பது குறித்த பட்டியலை ஏற்கனவே ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் கோவையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அறிவிக்க வேண்டும். முறைகேடுகள் நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது. ஒருவேளை முறையான விசாரணை இன்றி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், அந்த நாளை ஜனநாயகத்தின் கருப்பு நாள்’ என அறிவிப்போம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Leave a Reply