பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “இறுதி நாள் பிரசாரம் இருசக்கர வாகன பேரணியுடன் துவங்கியுள்ளது. கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,” என்றார்.
அவர் மேலும், “கடந்த இரண்டு நாட்களாக கோவையில் சில குழுக்கள் மூலம் காவல் துறையை மிரட்டுவது, காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது, எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பின்னால் திமுக சார்பிலான ஆட்கள் உள்ளனர். கோவை மக்களை பாதிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர்,” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, சில தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும், குறிப்பாக தெற்கு தொகுதியில் அதிகளவு பணம் பகிரப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பது மக்களுக்குத் தெரியும். கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்,” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கோவையில் மக்கள் மனநிலை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக மாறி வருகிறது. தேர்தல் கணிப்புகளும் அதனை உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளன. மக்கள் வாக்குப்பெட்டியில்தான் பதிலளிப்பார்கள்; அதனை 23ஆம் தேதி தெளிவாக காட்டுவார்கள்,” என்றார்.
அவர் மேலும், “செந்தில் பாலாஜி தற்போது தன்னை மாற்றிக் கொண்டவராக காட்டிக் கொண்டாலும், 23ஆம் தேதி மக்கள் அவருடைய உண்மையான முகத்திரையை கிழிப்பார்கள்,” என்று கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேலும் கடுமையாக செயல்பட வேண்டும் என்றும், வெளிமாவட்டத்திலிருந்து தேவையில்லாத நபர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
“வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே வானதி சீனிவாசனின் வெற்றி உறுதியாகிவிட்டது. எவ்வளவு பணம் வழங்கப்பட்டாலும் இந்த தேர்தல் முடிவை அது மாற்றாது,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



Leave a Reply