பாஜகக்கு தமிழ்மீது வெறுப்பு அதிகம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

Spread the love
பீகார் தேர்தலின்போது தமிழர்கள் குறித்து பேசிய வார்த்தைகளை தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் வந்து பேசட்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். மேலும், பாஜகக்கு தமிழ் மீது வெறுப்பு அதிகமாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்கள் வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கோவை கொடிசியாவில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது, 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபின் தாம் அதிக முறை வந்த மாவட்டம் கோவை தான் என்றும், கடந்த நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு கோவை மக்கள் மிகப்பெரிய வெற்றியை வழங்கியதாகவும் தெரிவித்தார். 2026 சட்டசபைத் தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசும்போது, “செந்தில் பாலாஜி என்றால் செயல் வீரர். எந்த பொறுப்பையும் கொடுத்தாலும் எதிர்பார்ப்பை விட அதிகமாக செய்து காட்டுபவர்” என முதல்வர் பாராட்டினார்.

பீகார் மாநில தேர்தலின்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி கூறியதை விமர்சித்த அவர், அந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கு அது தகுதியான பேச்சா என கேள்வி எழுப்பினார். “தமிழ்நாட்டில் பல்வேறு மொழி மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள். பீகாரில் பேசிய அதே வார்த்தைகளை தமிழ்நாட்டில் வந்து பேச தைரியம் இருக்கிறதா?” என்றும் அவர் சவால் விடுத்தார்.

மேலும், ஒடிசாவில் தமிழர்களை திருடர்களாக சித்தரித்து பேசியதாகவும், மத்திய கல்வி அமைச்சர் தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என கூறியதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதுபோன்ற கருத்துகளால் தமிழர்களை அவமதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த காரணங்களால்தான் தமிழ்நாட்டில் பாஜகக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றும், தமிழ்மீது பாஜகவுக்கு வெறுப்பு ஊறிப்போயுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.