ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகமதிப்பீட்டுத் தர நிர்ணயக் குழு, ஒளிரும் கோவை தன்னார்வ அமைப்புடன் இணைந்து நடத்திய “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்க நோக்கம் குறித்து உரையாற்றினார்.
சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 50 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.நிகழ்வில் யுஐடி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், மீத்தலால் ஜெயின் & கோ வின் நிர்வாக பங்குதாரரும், ஒளிரும் கோவை அமைப்பின் நிறுவன தலைவருமான முனைவர் சிஏ கைலாஷ் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினரும், ஓசை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான கே. காளிதாஸ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
ஒரு நாள் கருத்தரங்கில் கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம் எனும் பொருண்மையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், சமூக சேவகர்கள் எனப் பல தரப்பிலிருந்து 50 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய கட்டுரையாளர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு வல்லுநர் குழுவின் முன்னிலையில் கட்டுரைகள் வழங்கினர்.அவற்றுள் சிறந்த 3 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் கோவை தி சென்னை மொபைல்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.எம்.சம்சு அலி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கினார். அதன்படி, முதல் பரிசாக ரூ.15,000/- ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பி.நரசிம்மன், இரண்டாம் பரிசாக ரூ.10,000/- அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் மாணவி வி.சண்முகபிரியா, மூன்றாம் பரிசாக ரூ.5,000/- ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் எம்.மோகனா, ஆர்.ஸ்ரீ லஷ்மி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். கருத்தரங்கினைக் கல்லூரியின் அகமதிப்பீட்டு தர நிர்ணயக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஐ.பா்வின் பானு, முனைவர் வி.கிருஷ்ணபிரியா, ஒளிரும் கோவை அமைப்பின் உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவையை மேலும் அழகுபடுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம்



Leave a Reply