சுடுகாட்டில் இருந்து மண்சட்டியுடன் வந்து வேட்புமனுத் தாக்கல்: கோவையில் பரபரப்பு

Spread the love

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் 68 வயதான நூர் முகமது, வினோதமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில், நூர் முகமது சுடுகாட்டில் இருந்து மண்சட்டியை கையில் ஏந்தி கொண்டு வந்து மனுத் தாக்கல் செய்தார். தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்பதையும், மனிதன் இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதையும் உணர்த்தும் நோக்கில் இந்த நூதனப் போராட்டத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நூர் முகமது, இம்முறை 49-வது முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். வயது 68 ஆனாலும், மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து தேர்தலில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் அரசாங்கம் முழுமையாக இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

நூதன முறையில் சுடுகாட்டிலிருந்து மண்சட்டியுடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.