கோழிக் கண்டி வனப்பகுதியில் யானை தாக்கி கேரளாவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

Spread the love

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதியில் உள்ள கோழிக் கண்டி வனப்பகுதியில் யானை தாக்கியதில் கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் (56) உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (25) ஆனைகட்டியில் தங்கி படித்து வருகிறார். அவரை பார்க்க அவரது தந்தை மயிலன் கடந்த 15 ஆம் தேதி ஆனைகட்டிக்கு வந்திருந்தார். அதன்பிறகு அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

மயிலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், வழக்கம்போல எங்காவது சென்றிருப்பார் என குடும்பத்தினர் முதலில் நினைத்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகவும் அவர் வீடு திரும்பாததால் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்குட்பட்ட கோழிக் கண்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனக்காப்பாளர் மணிவண்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சந்திரன் ஆகியோர் அழுகிய நிலையில் இருந்த ஒரு ஆண் சடலத்தை கண்டுபிடித்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

​தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டன், சடலத்தில் இருந்த சட்டையை அடையாளம் காட்டி அது தனது தந்தை மயிலன் என்பதைக் உறுதிப்படுத்தினார். காட்டுப்பாதை வழியாகச் சென்றபோது காட்டுயானை தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *