கேஎம்சிஹெச் மருத்துவமனையில் மின்னணு மருத்துவ சேவை குறித்த சிறப்பு பயிலரங்கு

Spread the love

மருத்துவத் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் மின்னணு மருத்துவ சேவைகள் குறித்து உயர்மட்ட பயிலரங்கு கோயம்புத்தூரில் நடைபெற்றது. கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
“புதிய மின்னணு மருத்துவ சேவை: செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கு, மருத்துவத் துறையில் வேகமாக உருவாகி வரும் மின்னணு மாற்றங்களை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிந்து கொள்ள உதவியாக அமைந்தது.
இது குறித்து கேஎம்சிஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி விளக்கமளிக்கையில், தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை இந்த பயிலரங்கு மையமாகக் கொண்டதாக தெரிவித்தார். அதாவது,
செயற்கை நுண்ணறிவை மருத்துவ சேவையில் எவ்வாறு பயன்படுத்துவது, மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் இணைய பாதுகாப்பு சவால்கள் மற்றும் விதிமீறல்களுக்கு பெரிய அபராதங்கள் விதிக்கக்கூடிய தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என்றார்.
இந்த நிகழ்வு, வரும் ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள CAHOCON 2026 மாநாடு மற்றும் தெற்காசியாவிற்கான முதல் ISQua மண்டல மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்வாக அமைந்தது. “தொழில்நுட்பம், அக்கறை மற்றும் நம்பிக்கை – புதிய மருத்துவ நடைமுறை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் மருத்துவத் துறை தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
பயிலரங்கில் பல்வேறு துறை நிபுணர்கள் முக்கிய உரைகள் வழங்கினர்.
கேஎம்சிஹெச் கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர் மேத்யூ செரியன், கதிரியக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து விளக்கினார். கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆர். சுப்ரமணியம், புற்றுநோய் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துல்லியத்தைக் கூட்டுகிறது என்பதைப் பற்றி பேசினார்
1Hat Solutions நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி கார்த்தி புருஷோத்தமன், உலகளாவிய மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.
குப்புசாமி நாயுடு மருத்துவமனை முதன்மை தகவல் அதிகாரி பிஜு வேலாயுதன், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மின்னணு கருவிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நைன்த் டைமென்ஷன் நிறுவன இயக்குநர் அருணாச்சலம், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோயாளிகளின் தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்தார்.
மேலும் ஆயோஸ்டா இந்தியா நிறுவன இயக்குநர் ரவிசங்கர், மருத்துவத் துறையில் அதிகரித்து வரும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து பேசினார்.
நிகழ்வில் உரையாற்றிய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது இனி ஒரு தேர்வு அல்ல, அது காலத்தின் கட்டாயம் என தெரிவித்தார். கோயம்புத்தூர் நகரம் மருத்துவப் புதுமைகளின் முக்கிய மையமாக வளர்ந்து வருவதை இத்தகைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமரன் வரவேற்புரை ஆற்றினார். CAHOCON திட்ட நிர்வாகி ரபீனா நன்றியுரை வழங்கினார்.