பேரூரில் கஞ்சா பதுக்கி வைத்த 3 பேர் கைது: 2.4 கிலோ கஞ்சா பறிமுதல்

Spread the love
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் போலீசார் ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சதாசிவம் என்பவருக்கு சொந்தமான வாடகை வீடு அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த மூன்று பேர் போலீசாரைக் கண்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியபோது, விற்பனைக்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), ஹரி ராகவேந்திரன் (22) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.