மகளிரை தொழில்முனைவோராக்கியது அதிமுக ஆட்சி- பெண்கள் தின கொண்டாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

Spread the love

அதிமுக சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேரூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாநாடு போன்ற பிரம்மாண்டமான விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது அ.இ.அ.தி.மு.க ஆட்சி தான் .மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிக் கடன் வழங்கி பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கியதும் அ.இ.அ.தி.மு.க அரசே. வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மாநிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குதல், தாலிக்கு தங்கம் வழங்குதல், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மகப்பேறுக்குப் பின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும் தாய்–சேய் நலப் பெட்டகம் வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் பெண்கள் நலனுக்காக அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு எந்தவிதமான புதிய வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார் என்கிற நம்பிக்கையை இங்கு திரண்டிருக்கும் பெண்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் .தி.மு.க அரசால் நிறுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும் மகளிர் நலத்திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *