பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வருவாய்த் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Spread the love

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

மேலும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான வரம்பை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும், வெளிமுகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

உயர் அலுவலர்கள் ஊழியர்களை மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக இடம்பெற்றன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.