தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தேர்வு எழுதிக் கொண்டிருந்த தேர்வர்கள் கடும் மனவருத்தம் அடைந்தனர்.
காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையத்தில் காலை தேர்வு தொடங்கியது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட தேர்வர்கள் காலை தேர்வை எழுதி வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக தேர்வர்கள் குழப்பமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழக முழுவதும் நடைபெற்று வந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கோவையில் தேர்வு ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை தாமதமாக கிடைத்ததால், சுமார் 20 நிமிடங்கள் வரை தேர்வு தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் சுற்றறிக்கை வந்ததும் உடனடியாக தேர்வு நிறுத்தப்பட்டது. இதனால் தேர்வர்கள் பாதியிலேயே தேர்வை முடிக்காமல் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சென்னையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் பின்னணியில், கோவையில் உள்ள தேர்வு மையத்தில் முன்கூட்டியே காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், இந்த தேர்விற்காக பல மாதங்களாக தீவிரமாக படித்து தயாராகிய நிலையில், திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். தேர்வு நடத்தும் அமைப்பின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.



Leave a Reply