தாஜ்மகாலுக்கு முன்னரே ராஜேந்திர சோழன் தமிழகத்தில் உருவாக்கிய காதல் சின்னம்

Spread the love

 

தாஜ்மஹாலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் உள்ளது. இந்த காதல் சின்னம் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்டது.

சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழன்.ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், கி.பி. 1012-ஆம் ஆண்டு முதல் 1044-ஆம் ஆண்டு வரை மன்னராக இருந்தவர். இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த ஆடல் அழகிக்கும் இடையே இருந்த காதல் பலருக்கும் தெரியாதது. முதலாம் ராஜேந்திரன் கங்கையையும் கடாரத்தையும் வென்று உலகளாவிய பல வெற்றிகளை பெற்ற மாமன்னன் . உலகத்தை வென்ற இவனது உள்ளத்தை வெற்றி கொண்ட காதலியாக திகழ்ந்தவர் தான் திருவாரூரை சேர்ந்த ஆடல் அழகி பரவை நங்கை. இவர் ஆடல் பாடல் மட்டுமல்லாது இறை பணியிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். தனது காதலி பரவை நங்கைக்காக ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்தான் திருவாரூர் தியாகேசர் கோவிலுக்குள் அமைந்துள்ள ராஜேந்திர சோழீஸ்வரம் என்ற கோவில் ஆகும்.

பரவை நங்கையாரின் விருப்பப்படி ராஜேந்திரன் தனது பதினாறாம் ஆட்சி காலத்தில் கி.பி. 1028-ம் ஆண்டு தொடங்கி கி.பி. 1130 ம் ஆண்டு கற்கோயிலாக கட்டி முடித்தார். கற்கோயிலாக அமைத்ததுடன் மட்டுமல்லாது அந்த கோவிலின் வெளிப்புறம் தொடங்கி கலச பகுதி வரையில் வாயில் உட்புறம் முழுவதும் பொன் வேய்ந்தான். கருவறை கதவுகளுக்கும், முன்புற தூண்களுக்கும் செம்பினால் தகடு சாத்தினான். இதற்காக 20.643 கழஞ்சு (1 கழஞ்சு = 5.4 கிராம்) பொன்னும், 42.000 பலம் செம்பொன்னும் செலவிடப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. பரவை நங்கை விடுத்த கோரிக்கையின்படி, கட்டி முடிக்கப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடந்தது. அப்போது, ராஜேந்திரன் தன் அருகில் அவளை அமரச் செய்து தேரில் பவனி வந்தான். இவர்கள் இருவரும் இறைவனை தரிசித்த இடத்தில் ஒரு குத்துவிளக்கு ஒன்றை பரவை நங்கை நினைவாக ஏற்றினாள். இதனை ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ‘உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அனுக்கியர் பரவை நங்கையாரும் நிற்குமிடத் தெரியும் குத்து விளக்கொன்றும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.