அங்கமாலி – எருமேலி சபரிமலை ரயில் பாதை திட்டத்துக்கு, பச்சைக் கொடி காட்டிய கேரள அரசு, 50 சதவீதம் நிதி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐயப்பன் வீற்றிருக்கு சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம் அங்கமாலி – எருமேலி இடையே, 110 கி.மீ., துாரம் சபரிமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கமாலியில் இருந்து பெரும்பாவூர், மூவாத்துப்புழா, தொடுபுழா மற்றும் பாலா போன்ற நகரங்கள் வழியாக இந்த பாதை அமையும். முதல் கட்டத்தில், 8 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன. நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் முடங்கியது. பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், இந்த திட்டத்தின் மொத்த செலவு, 3,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘இந்த ரயில் பாதை திட்டத்துக்கு மொத்த செலவில், 50 சதவீதம் பங்களிக்க வேண்டும். கேரள அரசு, நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும்’ என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசு ஒப்புதல் கொடுத்ததோடு, திட்ட செலவில், 50 சதவீத தொகையான, 1,905 கோடி ரூபாயை, ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.
சபரிமலை முதல் புனலுார் மற்றும் நெடுமங்காடு வழியாக, இந்த ரயில் பாதையை நீட்டித்து, விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகத்துடன் இணைப்பதற்கான திட்டமும் உள்ளது. இது, கேரள மாநில மலைப் பகுதிகளுக்கு ஒரு உயிர் நாடியாகவும், கேரள பொருளாதாரத்துக்கு பெரிய உந்துதலாகவும் அமையும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் தரும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. 2024ம் ஆண்டில் மட்டும், கேரளாவில் உள்ள ஒன்பது முக்கிய ரயில் நிலையங்களில், டிக்கெட் விற்பனை வாயிலாக, 1,471 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சபரிமலை புதிய ரயில் பாதை திட்டம், அந்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கேரள அரசின் ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளதால், சபரிமலை திட்டப் பணிகள் வேகமெடுக்கும் என்கின்றனர்.



Leave a Reply