பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், கோவை சங்கனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், ‘உங்கள் குரல் – எங்கள் செயல்’ என்ற செயலி மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டறியும் பணியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்றார்.
மோடி முகாமில் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பதிவு, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான காப்பீடு அட்டை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இ-ஷ்ரம் அட்டை, செல்வமகள் திட்டப் பதிவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதாக கூறினார். மேலும், பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் முழுமையான மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கமல்ஹாசன் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “அவர் பேசியது எனக்கு புரியவில்லை; உங்களுக்கு புரிந்ததா?” என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்தார். கோவை மக்களுக்கும் அவரது பேச்சு புரியாததால் தான் அவர் அங்கிருந்து அனுப்பப்பட்டார் என்றும், அவரை டெல்லி அனுப்பியவர்கள் அவர்களுக்காவது நியாயம் செய்ய வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பெண்கள், பட்டியல் இன மக்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ரவுடிகளுக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திருச்சியில் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது அரசின் அலட்சியத்தை காட்டுவதாகவும் தெரிவித்தார். ஊடகத்தினர் அச்சமின்றி செய்தி சேகரிக்க வேண்டும் என்பதே தங்களின் கனவு என்றும் கூறினார்.
அஜித் குமார் லாக்கப் மரணம் தொடர்பாக, இது காவல் மரணம் என்ற சந்தேகத்தை ஆரம்பத்திலேயே பா.ஜ.க தெரிவித்ததாகவும், அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதல்வர் அந்த குடும்பத்தை நேரில் சந்திக்காதது திராவிட மாடல் அரசின் தோல்விக்கு எடுத்துக்காட்டு என்றார்.
அண்ணாமலை தேர்தலில் இருந்து விலகுவது குறித்த கேள்விக்கு, அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அண்ணாமலை சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் தெரிவித்தார். தொகுதி குறித்த முடிவுகள் டெல்லி தலைமை எடுக்கும் என்றார்.
செங்கோட்டையன் குறித்து பேசுகையில், அவர் தற்போது நடிகர் தொடங்கிய கட்சியுடன் இருப்பது வருத்தமளிப்பதாக கூறினார். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பலமானதாக உருவாகி வருவதாகவும், வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கே என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.



Leave a Reply