மக்களின் தலைமேல் பெரிய கடன் சுமையை ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Spread the love

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பல்வேறு விஷயங்களில் கடுமையாக விமர்சித்தார்.

நேருக்கு நேர் விவாதிக்க அழைத்தால் நேரமில்லை என கூறும் முதல்வர், சினிமா பார்ப்பதற்கு மட்டும் நேரம் வைத்திருக்கிறாரா என அவர் கேள்வி எழுப்பினார். பேராசிரியர் தேர்வில் திமுக தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் 50 மதிப்பெண்கள் வழங்கப்படுவது வெளிப்படையான பாரபட்சம் எனக் கூறி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெண்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறிய தமிழிசை சவுந்தரராஜன், ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடைபெற்று வருவதாகவும், சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கப்படவில்லை என்ற சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறினார்.

போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து பேசிய அவர், ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் மூண்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பண்டிகை காலங்களில் மக்கள் கடும் பொருளாதார சுமையை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். இதை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதன்மையாக கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார். தமிழை கொண்டாடுவது பாஜக என்றும், தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு என்றும் விமர்சித்தார்.

ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் திமுக சாதனைகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது வெளிப்படையான அரசியல் சார்புத்தன்மை எனக் கூறினார்.

பெண்கள் மாநாடு நடத்தும் அரசு, அதே நேரத்தில் செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறி, இது தற்போதைய ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்துவதாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டின் கடன் சுமையை சுட்டிக்காட்டிய தமிழிசை சவுந்தர்ராஜன், ஒருவருக்கு ரூ.1.27 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும், மாதம் ரூ.8,000 வட்டி சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்தார். ரூ.1,000 உதவித் தொகை வழங்கி மக்களின் தலைமேல் பெரிய கடன் சுமையை ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி என விமர்சனம் செய்தார்.

மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனடியாக “சங்கி” என குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கி என அழைப்பது தவறு என்றும் அவர் கூறினார். வலதுசாரி கருத்துகள் தமிழகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கின்றன என்றும், இடதுசாரிகளுக்கு இனி இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், தற்போதைய திமுக அரசு பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, பொருளாதாரம், கல்வி மற்றும் அரசு ஊழியர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.