கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் வளர்ச்சி காரணமாக கோவைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இதனால், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணியின் முதல்கட்டம் வரும் ஜனவரி மாதத்தில் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கல்வி, மருத்துவம், ஐடி, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நகரம் முன்னேறி வருவதால், இந்திய அளவில் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக நகரின் போக்குவரத்து மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது.
இந்தத் தேவையை முன்னிட்டு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவையின் பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் அவிநாசிசாலையில் திறக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், திமுக ஆட்சி வந்தபின் மேற்கு புறவழிச்சாலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் படி, மதுக்கரை அருகிலுள்ள மைல்கல் பகுதியில் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.40 கிலோமீட்டர் நீளத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. பணி மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டமாக 11.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.250 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளில் சுமார் 7 கிலோமீட்டர் வரை முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 4 கிலோமீட்டர் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மைல்கல் பகுதியில் பாலம் அமைக்கும் பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்: “மைல்கல் – மாதம்பட்டி இடையிலான 11.8 கிலோமீட்டர் பகுதியில் விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் மின்விளக்குகள் அமைக்கப்படும். அபாய வளைவுகளுக்கு மலைப்பகுதி சாலைகளில் இருப்பதைப் போல பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படும். மேலும், புறவழிச்சாலையை ஒட்டி உள்ள ஓடைகளில் மழைநீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.”
அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, “மாசுபாட்டை கட்டுப்படுத்த சாலையின் நடுவே அரளி செடிகள் நட்டுப் பராமரிக்கப்படும். கோவையின் இதமான காலநிலையை பேணுவதற்காக வழித்தடம் ஒட்டிய பகுதிகளில் மகிழம் மரக்கன்றுகள் நடப்படும். முதல்கட்டப் பணி ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும். அதற்குப் பிறகு இரண்டாம் கட்டப் பணிகள் உடனே தொடங்கப்படும்.”



Leave a Reply