“‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்கள் தரும் மனுக்களை சாதாரண காகிதமாக அல்ல, அவர்களின் வாழ்வாகவே பார்க்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள், மேலும் மகளிர் உரிமைத்தொகை மனுக்களின் நிலை குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் துறைச் செயலர்களும் கலந்து கொண்ட காணொலி காட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. அதில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் பெறப்பட்டுள்ளன.
மனுக்களை வெறும் ஆவணமாக அல்ல, பொதுமக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கருதி நீங்கள் அனைவரும் அணுக வேண்டும். நம்முடைய அரசை நம்பி மக்கள் தரும் கோரிக்கைகளை விரைவாக தீர்த்து வைப்பது நமது கடமை.
இந்த மனுக்களை வழக்கமான குறைதீர்ப்பு நாள் மனுக்களாகக் கருதாமல், மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுகி, மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக தீர்வு வழங்க இயலாத மனுக்களுக்கு, காரணத்தை தெளிவாகவும் மரியாதையுடனும் மக்களுக்கு விளக்க வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் நா. முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் பெ. அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Leave a Reply