கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், “சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம்: பன்முக ஆய்வு” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம், கவிஞர் கவிதாசன் படைப்புகளை ஆராய்ந்து எழுதப்பட்ட, 301 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய, 5 புத்தகங்களை வெளியிட்டார்.
மலேசியத் தமிழாய்வு நிறுவனம் சார்பில், அந்நிறுவனத் தலைவர் முனைவர் சு.குமரன், கவிஞர் கவிதாசனுக்கு, “ஆளுமைச் சிகரம்” என்ற விருதை வழங்கி கௌரவித்தார். அதைத்தொடர்ந்து கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜி., பக்தவத்சலம், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் பா.சம்பத்குமார், கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதைத்தொடர்ந்து “சிந்தனைக் கவிஞர்” முனைவர் கவிதாசன் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து 4 கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. இதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிஞர் கவிதாசன் படைப்புகள் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். பின்னர் மாலை நிறைவு விழா நடைபெற்றது. அதில் “சிந்தனைக் கவிஞர்” முனைவர் கவிதாசன் ஏற்புரை வழங்கி, 20 சிறந்த கட்டுரைகளுக்கு ரூ.1.5 லட்சம் ரொக்கப்பரிசும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், மரபின் மைந்தன் முத்தையா, பயனீர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் க.முருகேசன், டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி புல முதன்மையர் முனைவர் செ.பழனிச்சாமி, சிபி ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநர் முனைவர் அரங்க. கோபால், கோவை புத்தகத் திருவிழா தலைவர் எம்.ராஜேஷ், பாரதியார் பல்கலைக்கழக மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குநர் முனைவர் சி.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ப.ஜெயபால் நன்றி கூறினார்.
Leave a Reply