சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. விஜய் இந்த வெற்றியைப் பெற காரணமாக அமைந்த விஷயங்கள் என்னென்ன?
கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தனக்கும் தன் கட்சிக்கும் எதிரி திமுக மட்டுமே என்பதில் விஜய் தெளிவாக இருந்தார். அதற்கேற்ற வகையில்தான் அவருக்கு வியூகங்களும் வகுத்து கொடுக்கப்பட்டது. எந்த மேடையில் விஜய் பேசினாலும் திமுகவை மட்டுமே விமர்சிப்பார். ஸ்டாலினை மட்டுமே பெயர் குறிப்பிட்டு தன்னுடைய எதிரியாக முன் நிறுத்தினார். திமுகவிலிருந்து விஜய் மீது சிறுவிமர்சனம் வந்தாலும் விஜய்யே நேரடியாக பதில் சொல்வார். உதாரணமாக கடந்த ஆண்டு திமுகவின் இளைஞரணி நடத்திய புத்தகத் திருவிழாவில் உதயநிதி தவெகவை பொருட்காட்சி அட்டைகளோடு ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.
விஜய் உடனடியாக அதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார். அதேமாதிரி, கூட்டணி விவகாரத்திலும் சில குழப்பங்கள் இருந்தாலும் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்கிற ஸ்டாண்டில் உறுதியாக நின்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் அதிமுகவே விஜய்யின் வியூகத்துக்கு முன்பு தடுமாறியது. திமுகவை எதிர்க்கக்கூடிய வல்லமை தங்களுக்கு மட்டுமே உண்டு. அதிமுக திமுகவை எதிர்க்க வேண்டுமானாலும் தங்களின் துணையுடனேயே செய்ய முடியும் என்கிற பிம்பத்தை உருவாக்கினர். இந்த தெளிவான முடிவுதான் தவெகவை அரசியல் களத்தில் முதன்மை சக்தியாக மாற்றியது.விஜய்யை அரசியலிலும் உச்ச நட்சத்திரமாகவே உயர்த்திப் பிடித்தனர்.
அதனால்தான் கரூர் சம்பவத்தில் விஜய் தார்மீக பொறுப்பை ஏற்காவிடிலும், மக்கள் பெரும்பாலும் விஜய்க்கு ஆதரவாகவே இருந்தனர். வேறெந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அப்படியொரு சம்பவத்துக்கு பிறகு அவரின் எதிர்காலம் என்னவாகியிருக்கும் என்றே தெரியவில்லை. ஆனால், விஜய்க்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை. உயிரிழப்பை சந்தித்த குடும்பங்கள் கூட விஜய்க்கு எதிராக பெரிதாக பேசவில்லை. இப்படியான மாபெரும் ஈர்ப்புதான் விஜய்க்கு தேர்தலிலும் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பாணி ஆரோக்கியமானதா இல்லையா என்பதெல்லாம் தனி வாதம். ஆனால், இதுதான் விஜய்யின் சக்சஸ் பார்முலா.



Leave a Reply